மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி, 3 வாலிபர்கள் படுகாயம் பந்தயத்தில் ஈடுபட்டபோது விபரீதம்
பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது தடுப்பு சுவரில் மோதியதில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூரில் இருந்து ஜமாலியா வழியாக ஓட்டேரி, புரசைவாக்கம், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நெரிசல் இன்றி வாகனங்கள் செல்வதற்காக முரசொலி மாறன் மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால் இந்த பாலத்தில் மாநகராட்சி பஸ்களை தவிர கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் பாலத்தின் கீழே உள்ள குறுகிய சாலை வழியாகத்தான் செல்கின்றன.
இதனால் இந்த மேம்பாலத்தில் வாகன நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி அப்பகுதி வாலிபர்கள், சிறுவர்கள் தினமும் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பு சுவரில் மோதல்
நேற்று காலையும் வழக்கம்போல் சில வாலிபர்கள் முரசொலிமாறன் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டேரி சந்தியப்பன் தெருவைச் சேர்ந்த முரளிதரன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (18), ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த அப்பாஸ்(19) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளிலும், மேலும் 3 மோட்டார் சைக்கிள்களில் சில வாலிபர்களும் பந்தயத்தில் ஈடுபட்டனர்.
மோட்டார்சைக்கிளை முரளிதரன் ஓட்ட அவருக்கு பின்னால் ராஜேஷ், அப்பாஸ் அமர்ந்து இருந்தனர். ஓட்டேரியில் இருந்து பெரம்பூர் நோக்கி முரசொலி மாறன் மேம்பாலத்தில் வேகமாக சென்றபோது, மையப்பகுதியில் உள்ள வளையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
3 பேர் படுகாயம்
இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த முரளிதரன், தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே முரசொலிமாறன் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மேடையில் விழுந்தார். மற்ற இருவரும் மேம்பாலத்தில் விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதுபற்றி அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார், 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் முரளிதரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.