பிரேக் போட்டதால், ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

தானேயில் பிரேக் போட்டதால் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2018-08-19 00:00 GMT
தானே, 

தானேயில் பிரேக் போட்டதால் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தூக்கி வீசப்பட்ட சிறுவன்

தானேயை சேர்ந்த சிறுவன் சங்கேத். இவன் சம்பவத்தன்று தானேயில் இருந்து மும்ராவிற்கு ஆட்டோவில் தாயுடன் சென்றான். திவா நெடுஞ்சாலை அருகே ஆட்டோ சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நடுவழியில் நின்றது.

இதனால் டிரைவர் மோட்டார் சைக்கிளின் மீது மோதாமல் இருக்க அவசர பிரேக் போட்டு ஆட்டோவை நிறுத்தினார். இதில் சிறுவன் சங்கேத் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டான்.

டேங்கர் லாரியில் சிக்கினான்

இதில் சாலையில் விழுந்த சிறுவன், அந்த வழியாக வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கினான். இந்த விபத்தில் உடல் நசுங்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட அவனது தாய் கதறி அழுதார்.

விபத்து நடந்த உடனே டேங்கர் லாரி டிரைவர் அதிகுல் ரகுமான் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். எனினும் பொதுமக்கள் அவரை விரட்டி சென்று பிடித்தனர். இந்த விபத்து குறித்து மும்ரா போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்