வெள்ளத்தில் மின்மோட்டார் அடித்து செல்லப்பட்டது: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வெள்ளத்தில் மின்மோட்டார் அடித்து செல்லப்பட்டதால், திண்டுக்கல் நகருக்கு வினியோகிக்கப்படும் காவிரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-08-18 23:52 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் அணை உள்ளது. அங்கிருந்து தினமும் 10 எம்.எல்.டி. (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் நகர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதலாக 10 எம்.எல்.டி. தண்ணீர் பெற்று வினியோகிக் கப்பட்டது.

அதற்காக கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் பொருத்தப்பட்டது. கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு, நீர்உந்து நிலையம் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக திண்டுக் கல் நகருக்கு குடிநீர் கொண்டுவரப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் எடுக்கப்படும் உறை கிணறு கடந்த சில நாட்களாக தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. மேலும் நீர்உந்து நிலையத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் நகருக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வரவில்லை. மேலும் ஆத்தூர் காமராஜர் அணையும் வறண்டுவிட்டது. இதனால் நகர் பகுதிக்கு 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது உறை கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் நகருக்கு மேலும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மனோகர் கூறும்போது, ஆத்தூர் காம ராஜர் அணையில் உள்ள பள்ளத்தில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் இருந்து தினமும் 2 எம்.எல்.டி. மட்டுமே தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் நீர்உந்து நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளதால், அங்கிருந்து குடிநீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் நகர் பகுதிக்கு தற்போது வினியோகிக்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்