கடலில் கலக்கும் காவிரி நீரை புதிய கால்வாய் மூலம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
கடலில் கலந்து வீணாகும் காவிரி நீரை புதிய கால்வாய் மூலம் கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் மற்றும் அதை சுற்யுள்ள 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து செந்துறை, கரந்தரைமலை, நத்தம், சிங்கம்புணரி வழியாக பாலாறு செல்கிறது. இந்த பாலாற்றில் வரும் தண்ணீரை சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள கண்மாய்களுக்கு திருப்பி விட்டு அதன் மூலம் இந்த பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போதிய மழையில்லாததால் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக சிங்கம்புணரி பாலாறு பாழாகி போன ஆறாக வறண்டு காணப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ஆற்றுப்பாசனம் விவசாயிகளுக்கு கை கொடுக்காமலும், பருவ மழை பொய்த்தும் காணப்படுவதால் இந்த பகுதி விவசாயிகள் விவசாயத்தை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் தற்போது இந்த பகுதியில் விளை நிலங்களாக இருந்த விவசாய நிலங்கள் தற்போது பொட்டல் காடாகவும், சீமைக்கருவேல மரங்கள் மண்டியும் காணப்பட்டு வருகிறது.
தற்போது காவிரி மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் முறையாக தூர்வாராத காரணத்தினால் காவிரி நீர் அதிகபடியாகி கடலில் கலக்கிறது. மேலும் திருச்சி மாவட்டத்தில் இருந்து செல்லும் இந்த நீரை சுமார் 70கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் உள்ள பாலாற்றிக்கு புதிய கால்வாய் மூலம் வர வழி செய்தால், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இது குறித்து அ.காளாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வக்குமார் கூறியதாவது:–
சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் முற்றிலும் பொய்த்து விட்டது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சிங்கம்புணரி வழியாக செல்லும் பாலாற்றில் தண்ணீர் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த ஆற்றை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், இப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆழதுளை கிணறுகள் வறண்டு போனது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் முழுமையாக விவசாயம் நடைபெற்றது. ஆனால் தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் பல நூறு ஏக்கர் விவசாயம் இல்லாமல் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். ஏரிகள் தூர்வாரப்படாத காரணத்தினால் காவிரி தண்ணீர் நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
எனவே திருச்சியில் இருந்து செல்லும் காவிரி நீரை திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பாலாற்றில் இணைக்கும் வகையில் புதிய கால்வாய் அமைத்துக் கொடுத்தால் திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய மக்களுக்கு பெரிதும் பயனாக அமைந்து, விவசாயம் செழிப்படையும். இந்த கோரிக்கை ஏற்கனவே சுதந்திர தினத்தன்று இங்கு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கோரிக்கை மனுவாக கொடுக்கப்பட்டு அவை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.