பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை திருடி முதியவரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி

வடபழனியில் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து ஏ.டி.எம். கார்டை திருடி முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.30 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-18 22:21 GMT
பூந்தமல்லி,

சென்னை சூளைமேடு, பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவர் நேற்று வடபழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுக்க சண்முகத்திற்கு உதவினார். அவரை நம்பி சண்முகம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அந்த நபர் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார்.

பின்னர் ஏ.டி.எம். கார்டை சண்முகத்திடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். சில மணி நேரம் கழித்து சண்முகத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், தன்னிடம் இருந்த ஏ.டி.எம் கார்டை பார்த்தபோது, அது தன்னுடைய ஏ.டி.எம் கார்டு இல்லை என்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து வடபழனி போலீசில் சண்முகம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மர்ம நபர் பணம் எடுத்து கொடுத்து விட்டு சண்முகத்தின் ஏ.டி.எம் கார்டுக்கு பதிலாக போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து ஏமாற்றியுள்ளார். பின்னர் அசல் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி சூளைமேட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.30 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்