கீழ்பவானி வாய்க்காலில் ஒற்றை, இரட்டை படை மதகுகளுக்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க சாத்தியமில்லை - கலெக்டர் பிரபாகர்
கீழ்பவானி வாய்க்காலில் ஒற்றை, இரட்டை படை மதகுகளுக்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க சாத்தியமில்லை என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
ஈரோடு,
கீழ்பவானி வாய்க்கால் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் ஒற்றை படை மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கரும், இரட்டைப்படை மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கரும் பாசன வசதி பெற்று வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து ஒற்றைப்படை மதகுகளுக்கு கடந்த 1–ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணை முழு கொள்ளளவு எட்டும் நிலையை அடைய இருந்ததால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் வீணாக செல்வதற்கு பதிலாக கீழ்பவானி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஒற்றை மற்றும் இரட்டை படை மதகுகளுக்கும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் சில விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே திறந்துவிட முடியும். அதாவது வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக 150 கனஅடி வீதம் மொத்தம் வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் கீழ்பவானி வாய்க்கால் கரை நிரம்ப தண்ணீர் செல்கிறது. இதற்குமேல் தண்ணீரை திறக்க முடியாது. இதனால்தான் அணையை கட்டும்போதே ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மதகுகளுக்கு தனித்தனியாக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் இன்னும் கடைமடை வரை சரியாக தண்ணீர் செல்லவில்லை. இந்தநிலையில் இரட்டைப்படை மதகுகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டால் நல்லாம்பட்டியை கடந்து வாய்க்காலில் தண்ணீர் செல்லாது. எனவே ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மதகுகளுக்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க சாத்தியமில்லை.
பவானிசாகர் அணையில் எந்தெந்த மாதங்களில் எத்தனை அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. அதன்படி அணையின் நீர்மட்டத்தை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.