தரிகெரே அருகே கல்லால் அடித்து பெண் கொலை பணப்பிரச்சினை காரணமா? போலீசார் விசாரணை
தரிகெரே அருகே கல்லால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். பணப்பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கமகளூரு,
தரிகெரே அருகே கல்லால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். பணப்பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட்டிக்கு பணம் கொடுக்கும்....சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா துக்ளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சாரதம்மா(வயது 55). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். சாரதம்மா, தனது மகளுடன் ஒரே வீட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாரதம்மாவும், அவரது மகளும் வீட்டில் படுத்து தூங்கினார்கள்.
நேற்று காலையில் சாரதம்மாவின் மகள் எழுந்து பார்த்தார். அப்போது சாரதம்மா வீட்டில் இல்லை. இதனால் அவர் வெளியே சென்று இருப்பார் என்று மகள் நினைத்து கொண்டார். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆனபோதிலும் சாரதம்மா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகள், சாரதம்மாவை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டின் பின்புறம் சென்ற சாரதம்மாவின் மகளுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அங்கு முகத்தில் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சாரதம்மா இறந்து கிடந்தார். அவர் அருகே ரத்தக்கறை படிந்த ஒரு கல்லும் கிடந்தது. இதையடுத்து சாரதம்மாவின் உடலை பார்த்து அவரது மகள் கதறி அழுதார்.
பணப்பிரச்சினை காரணமா?இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தரிகெரே புறநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று கொலையான சாரதம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவரை யாரோ மர்மநபர்கள் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை.
இதன்பின்னர் சாரதம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாரதம்மா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால் பணப்பிரச்சினை காரணமாக அவரை யாராவது கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதுகுறித்து தரிகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.