திம்மாவரம் மகாலட்சுமிநகரில் புகும் மழைநீரை தடுக்க நீஞ்சல் மடுவில் கரை அமைத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திம்மாவரம் மகாலட்சுமி நகரில் புகும் மழைநீரை தடுக்க நீஞ்சல்மடுவில் கரை அமைத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ஊராட்சியில் மகாலட்சுமிநகர் உள்ளது. நீஞ்சல் மடுவின் ஓரத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ள இந்த பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பலத்தமழையின் போது, தண்ணீர் தேங்கியது. இதில் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் தண்ணீரில் மூழ்கியது. அதிக அளவில் பொருள் சேதமும் ஏற்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டனர். மழையால் இந்த பகுதியில் இருந்து வெளியேறியவர்கள், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குடியேறினர். மேலும் 2016-ம் ஆண்டு வார்தா புயலின் போதும் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தடுப்பணை
ஆகவே நீஞ்சல் மடுவில் கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். கரை அமைத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக பொதுப்பணித்துறை சார்பில் மகாலட்சுமிநகர் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகாதவண்ணம் நீஞ்சல்மடுவில் ரூ.12 கோடியில் தடுப்புச்சுவர் கட்டுவதாக திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு மாவட்ட பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நீஞ்சல் மடு கால்வாயின் ஒருபுறம் பொதுப்பணித்துறையின் சார்பில் மண்கொட்டி கரை அமைக்கும் பணியை தொடங்கி உள்ள நிலையில் மின்சாரத்துறையின் சார்பில் அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றாததால், மின்சாரத்துறையின் மீது காரணத்தை காட்டி பொதுப்பணித்துறை கரை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
இந்த பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையால் நீஞ்சல் மடுவில் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் போது மீண்டும் தண்ணீர் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நீஞ்சல் மடுவில் கரை அமைத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.