சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

தாந்தோணி ஊராட்சியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-18 22:30 GMT

கணியூர்,

கணியூர் அருகே உள்ள தாந்தோணி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில் நேற்று காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் ஊராட்சியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு 15–க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் இங்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு, திருமூர்த்தி அணையில் போதிய நீர் இருப்பு, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், குளங்கள் அனைத்திலும் தண்ணீர் உள்ளன. ஆனால் இந்த நிலையில் கூட இந்த ஊராட்சியில் போதுமான குடிநீர் வினியோகம் செய்வதில்லை. மேலும் இதுபற்றி ஊராட்சி செயலாளரிடம் புகார் செய்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இங்குள்ள வீட்டு இணைப்பிலும் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.

மாற்று ஏற்பாடாக இந்த ஊராட்சியில் குடிநீர் தொட்டிகள் எதுவும் கட்டிக்கொடுக்கப் படவில்லை. இதனால் குடிநீர் வினியோகம் செய்யும் போது வீட்டில் உள்ள அனைத்து பாத்திரங்களிலும் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. 10 நாட்களுக்கு குடிப்பதற்காக தண்ணீரை இருப்பு வைக்கும் போது அதில் புழுக்கள் உருவாகி விடுகிறது. எனவே எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லை என்றால் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்