முதல்–மந்திரி குமாரசாமி இன்று சிக்கமகளூரு வருகை மழை, வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார்
முதல்–மந்திரி குமாரசாமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) சிக்கமகளூருவுக்கு வருகை தருகிறார். அவர் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளார்.;
சிக்கமகளூரு,
முதல்–மந்திரி குமாரசாமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) சிக்கமகளூருவுக்கு வருகை தருகிறார். அவர் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளார்.
சிக்கமகளூருவில் மழைகர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை மலைநாடு என்று வர்ணிக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. அந்த மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் சிக்கமகளூரு மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. துங்கா, பத்ரா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகளும் கவலை அடைந்து உள்ளனர்.
குமாரசாமி இன்று வருகைஇந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாசனில் இருந்து மங்களூரு சென்ற முதல்–மந்திரி குமாரசாமி சிக்கமகளூரு வழியாக காரில் சென்றார். அப்போது அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்கள் சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட வரும்படி கேட்டு கொண்டனர். அவருடன் கூடிய விரைவில் வருவதாக உறுதி அளித்தார்.
இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மழை, வெள்ள சேதங்களை பார்வையிட முதல்–மந்திரி குமாரசாமி சிக்கமகளூருவுக்கு செல்கிறார். சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா தாலுகாக்களில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிடும் அவர் பின்னர் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். பின்னர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.