திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன.

Update: 2018-08-18 22:45 GMT
வந்தவாசி,

பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான கேரள மாநில மக்களுக்கு உதவும் பொருட்டு வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் 20 மூட்டை அரிசி, 200 பாய்கள், 50 செட் சீருடைகள், 50 கல்லூரி பைகள், 200 பெட்டி மெழுகுவர்த்தி, 200 பெட்டி கொசுவத்தி சுருள், 36 பெட்டி தீப்பெட்டிகள் ஆகியவற்றை கல்லூரி தலைவர் பி.முனிரத்தினம் வந்தவாசி வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் வழங்கினார்.

அப்போது கல்லூரி துணை முதல்வர் கே.சுகுணா, கல்வியியல் கல்லூரி முதல்வர் வி.நிமாவதி மற்றும் மாணவிகள் உடன் இருந்தனர். இந்த நிவாரண பொருட்கள் வெள்ள நிவாரண மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆரணியில் பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்கம், அரிமா சங்கம், சிறு,குறு, பெரு வியாபாரிகள் சங்கம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவும் வகையில் புத்தாடைகள், மெழுகுவர்த்தி, பிஸ்கெட், கேக், பிரட், மருந்து வகைகள் உள்பட நிவாரண பொருட்களை சங்க நிர்வாகிகள் ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) கோதண்டபாணியிடம் ஒப்படைத்தனர்.

அப்போது தாசில்தார் கிருஷ்ணசாமி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சரவணன், ஜெயச்சந்திரன், புருஷோத்தமன், மண்டல துணை தாசில்தார் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

செங்கம் மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜா மற்றும் கடை உரிமையாளர்கள் பிஸ்கெட், பிரட், அவசர தேவைக்கான மருந்துகள், நாப்கின் உள்ளிட்ட நிவாரண பொருட்களை செங்கம் தாசில்தார் ரேணுகாவிடம் அளித்தனர்.

அப்போது வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சேத்துப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாசிடம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை அரிமா சங்கம் சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேலுவிடம், சங்க தலைவர் சுந்தரராசன் வழங்கினார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் மற்றும் துருகம் கிராமத்தில் நேற்று கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் சுபிச்சந்தர் மற்றும் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிட பொதுமக்களிடம் இருந்து அரிசி மூட்டைகள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள் உள்பட பல்வேறு அத்திவாசிய பொருட்களை பெற்றனர்.

மேலும் செய்திகள்