கும்மிடிப்பூண்டியில் லாரி டிரைவரை வெட்டிய 4 பேருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டியில் லாரி டிரைவரை வெட்டிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ள வி.எம். முதல் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 29). லாரி டிரைவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று காலை வீட்டில் மணிகண்டன் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டு வாசலில் 2 மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. 2 மோட்டார் சைக்கிளிலும் மொத்தம் 4 பேர் வந்தனர். அதில் 2 பேர் மட்டும் தங்களது முகத்தை கர்சீப்பால் மூடியவாறு மணிகண்டனின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் மணிகண்டனின் தலையில் வெட்டினார். இதனையடுத்து ரத்தம் சொட்ட, சொட்ட, கூச்சலிட்டவாறு மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
4 பேருக்கு வலைவீச்சு
இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து விடுவார்களோ என பயந்து போன மேற்கண்ட மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து உடனடியாக தப்பிச்சென்று விட்டனர். படுகாயம் அடைந்த லாரி டிரைவர் மணிகண்டன், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வெட்டிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில்
கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டம்பேடு சாலையையொட்டி பாருடன் கூடிய டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையை மூடும்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அப்போது கடையில் விற்பனையாளர்களான கும்புளியை சேர்ந்த முரளி (31), சின்ன வழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்த அருள் (40) ஆகியோர் இருந்தனர். கடைக்கு வந்த 2 பேரும் கத்தி முனையில் மேற்பார்வையாளர் எங்கே? வசூல் பணம் எங்கே? என விற்பனையாளர் முரளியிடம் கேட்டனர்.
அதற்கு அவர், மேற்பார்வையாளர் பணத்தை கொண்டு சென்று விட்டார் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் விற்பனையாளர் முரளியை கத்தியால் குத்தினர். மேலும், அருகில் இருந்த பார் ஊழியரிடம் இருந்து ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த டாஸ்மாக் விற்பனையாளர் முரளி, கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.