உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை - வைகோ பேட்டி

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என்று கோவையில் வைகோ கூறினார்.

Update: 2018-08-18 23:45 GMT

கோவை,

ஈரோடு மாவட்டத்தில் ம.தி.மு.க. மாநில மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ளது. இதையொட்டி தொண்டர் அணிக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைக்க நேற்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து வைகோ கோவை வந்தார். பின்னர் கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ம.தி.மு.க.வின் முப்பெரும் விழா மாநாடு ஈரோட்டில் கலைஞர் மைதானத்தில் மிக சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, ம.தி.மு.க.வின் வெள்ளி விழா, எனது பொதுவாழ்வின் பொன்விழா ஆகிய மூன்றையும் இணைத்து இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு கழக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டு பொன்விழா மலரை வெளியிடுகிறார். திராவிடர் கழக தலைவர் வீரமணி பங்கேற்று பாராட்டு பட்டயம் வெளியிட உள்ளார். இந்த மாநாட்டில் மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்–மந்திரி ராமசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா மற்றும் தற்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சியின் தமிழக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. திராவிட இயக்க வரலாற்றில் இந்த மாநாடு முக்கிய இடத்தை பெறும் என்று நினைக்கிறேன். உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என பலமுறை நீதிமன்றம் கூறியிருக்கிறது. வார்டு வரையறை முடிந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை என்பதை தான் இது காட்டுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாவிட்டால் பாதிப்பு மக்களுக்குதான்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் ஆர்.ஆர்.மோகன்குமார், குகன் மில் செந்தில் மற்றும் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், வே.ஈஸ்வரன், ராமசாமி, சூரி நந்தகோபால், கணபதி செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்