கேரள மாநிலத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது

உணவு பாதுகாப்புத்துறை- பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கேரள மாநிலத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2018-08-18 22:45 GMT
பெரம்பலூர்,

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் கனமழையின் காரணமாக தங்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து வாடும் கேரள மாநில மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட நிவாரணபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், பல்வேறு வணிக சங்கங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, குடிநீர், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 டன் நிவாரண பொருட்களை லாரியில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) சவுமியா சுந்தரி, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சண்முகநாதன், செயலாளர் இளங்கோவன், இணைச் செயலாளர் ரவிசுந்தரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்