தினம் ஒரு தகவல் : வீடுகளில் முதியவர்களுக்கான வசதிகள்

கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதைப் போல் முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகி விட்டது.

Update: 2018-08-18 06:53 GMT
முதுமை எல்லோருக்கும் வரும் என்பதால் பெற்றோருக்காகவோ, தாத்தா-பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலைநோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, அதில் வசதிகள் எப்படி இருக்க வேண்டும்?

தரையை அழகாய் வடிவமைக்கிறார்கள். அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், டைல்ஸ் தரைகளால் முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் தரைகளில் முதியவர்கள் நடக்கும்போது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். குறிப்பாகக் காலை நனைத்து விட்டு வரும்போது விழும் வாய்ப்புகள் அதிகம். முதியவர்கள் கீழே விழுவது அவர்களின் உடல் நலத்துக்குக் கேடு விளைவித்துவிடும். எனவே வழுக்கும் தன்மையுள்ள டைல்ஸ்களுக்குப் பதிலாக, சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பதிக்கலாம்.

மாடிகள் நல்ல விஷயம். ஆனால் இது வயதானவர்களுக்கு ஏற்றதல்ல. முடிந்த அளவுக்கு வீட்டுக்குள் உள்ள மாடி படிக் கட்டுகளைச் சாய்வு தளமாக அமைப்பது முதியவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் படிக்கட்டுகளின் ஓரத்தில் நிச்சயமாகக் கைப்பிடி அமைக்க வேண்டும். மாடிப் படிக்கட்டுகளில் டைல்ஸ்கள் பதிப்பதைத் தவிர்க்கலாம். குளியலறையில் சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களைப் பயன் படுத்துவது முதியவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்றது. குளியலறை அலமாரிகளை குறைந்த உயரத்தில் அமைப்பது நல்லது. குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகள் வலுவாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்யவும்.

கழிவறையில் இந்திய பாணிக் கழிவறைகள்தான் சிறந்தது. ஆனாலும் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மேற்கத்திய பாணிக் கழிப்பிடங்களே ஏற்றது. இந்திய பாணிக் கழிப்பிடங்கள் முதியவர்களுக்குக் கஷ்டத்தையே கொடுக்கும்.

முதியவர்கள் உட்கார்ந்து எழ மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதால் சுவர்களின் பக்கவாட்டில் கைப்பிடிகள் அமைப்பது அவர்களுக்குப் பயனளிக்கும். மேற்கூறிய அனைத்து அறைகளும் முதியவர்கள் விழுவதற்கும், காயம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ள பகுதிகள். எனவே முதியவர்களுக்கான வசதிகள் கண்டிப்பாக தேவை. மற்ற அறைகளிலும், முதியவர்களுக்கு ஏற்ற வகையில் வசதிகளைச் செய்து கொடுப்பதும் நல்லதுதான். 

மேலும் செய்திகள்