கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்க எதிர்ப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்க எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிலாளர்கள் பஸ்கள் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
தமிழகம் முழுவதும் கண்டக்டர் இல்லாமல் இயங்கக்கூடிய புதிய பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திருவண்ணாமலை அருகே தேனிமலை பணிமனையில் உள்ள பஸ்களை இயக்காமல் தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனைகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்காமல், கிளை மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதில் சுமூக தீர்வு கிடைக்காததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் பணிமனையில் உள்ள பஸ்களின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்குவதால் டிரைவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பஸ்களை சாலையில் பின்புறமாக இயக்குவதில் சிக்கல் இருக்கிறது. திடீரென சாலையில் விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்பட்ட பஸ்சில் இருந்து வேறு பஸ்சுக்கு பயணிகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. வேலை பளுவும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்க தடை செய்ய வேண்டும். மேலும், கட்டுப்பாட்டு அறையில் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.