வாலாஜாவில் இரும்பு கம்பியால் அடித்து மேடை பாடகர் கொலை

வாலாஜாவில் மேடை பாடகர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-18 00:12 GMT
வாலாஜா,

வாலாஜா தென்றல் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 50), மேடை பாடகரான இவர் பாட்டு கச்சேரிகள் நடத்தியும், கச்சேரிக்கு ஏற்பாடுகள் செய்தும், அதே பகுதியில் பாடல் மற்றும் இசை கற்றுக்கொடுத்தும் வந்தார். இவரது மனைவி தனுஜாகுமாரி (43). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு பிரகதீஸ்வரன் (25), பிரசாத் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பிரகதீஸ்வரன் பொறியியல் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அசோக்குமாருக்கும், தனுஜாகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அசோக்குமார், தனுஜாகுமாரி மற்றும் மகன்களை இழிவாக பேசி அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பிரகதீஸ்வரன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அசோக்குமாரை தாக்கியுள்ளார். இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவலறிந்ததும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அசோக்குமார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பிரகதீஸ்வரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்