வாஜ்பாய் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

வாஜ்பாயின் மறைவினையொட்டி புதுச்சேரி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-08-18 00:03 GMT
புதுச்சேரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவினை தொடர்ந்து காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த ஜனநாயகவாதியாகவும் திகழ்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்திய நாட்டின் நலனுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட ஆற்றல்மிகு தலைவர் வாஜ்பாய்.

பொதுவாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தீர்க்க சிந்தனையாளர். தன்னலமற்ற தனது அயராத உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து பிரதமராக பதவி வகித்த பண்பாளர். வேற்றுமை பார்க்காமல் அரசியல் நாகரீகத்துடன் அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் பரந்த மனம்படைத்த பெருந்தன்மைமிக்க அவரது மறைவால் வாடும் அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர் சார்ந்த இயக்க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

வாஜ்பாயின் மறைவு இந்திய நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த நாட்டை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அரசுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த தலைவர் அவர். நம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற ஒப்பற்ற பிரதமராக விளங்கியவர் அவர்.

உலக அரங்கில் இந்தியாவை வல்லரசு நாடுகள் வரிசையில் சேர்த்தார். தேசப்பற்று மிக்க ஒப்பற்ற தலைவர். எதிர்க்கட்சிகளை அரவணைத்து சென்றவர். சிறந்த பேச்சாளர், சிறந்த கவிஞர் என பன்முக சிறப்புகளை கொண்டவர். இவ்வாறு அந்த செய்தியில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சலீம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் பல சிந்தனைபோக்குகளால் விவாதிக்கப்பட்டு வளர்த்தெடுக்கும்போது வாஜ்பாய் தான் ஏற்றுக்கொண்ட சிந்தனைக்காக திறம்பட விவாதித்தவர். பாராளுமன்றத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸ்டு தலைவர் ஹிரோன் முகர்ஜியுடன் நட்புறவு கொண்டவர். சிறந்த பாராளுமன்றவாதி பட்டம் முதலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் இந்திரஜித் குப்தாவுக்கும், அடுத்து வாஜ்பாய்க்கும் வழங்கப்பட்டது. பல கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமராக இருந்தபோது 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி நடத்தினார். இவ்வாறு சலீம் கூறியுள்ளார்.

புதுவை மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முகமது ஷரீப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பாகும். அவருடைய மறைவுக்கு புதுவை மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்