சிராடி மலைப்பாதையில் டேங்கர் லாரி கவிழ்ந்து பலியான டிரைவரின் உடலை மீட்க 4-வது நாளாக தீவிர நடவடிக்கை
சிராடி மலைப்பாதையில் டேங்கர் லாரி கவிழ்ந்து பலியான டிரைவரின் உடலை மீட்க 4-வது நாளாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹாசன்,
சிராடி மலைப்பாதையில் டேங்கர் லாரி கவிழ்ந்து பலியான டிரைவரின் உடலை மீட்க 4-வது நாளாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடலை மீட்டு தர வேண்டும் என்று டிரைவரின் மனைவியும், தாயும் கலெக்டர் ரோகிணி சிந்தூரியின் காலில் விழுந்து கதறி அழுதனர்.
டிரைவர்-கிளனர் சாவு
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஹாசன் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு சிராடி மலைப்பாதையில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா ஆனேகோடு கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஓட்டினார். ராய்ச்சூர் மாவட்டம் மான்வியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கிளனராக இருந்தார்.
இந்த நிலையில், சிராடி மலைப்பாதையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், திடீரென்று டேங்கர் லாரி சாலையோரத்தில் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் டிரைவர் சந்தோசும், கிளனர் வெங்கடேசும் பலியானார்கள். 40 அடி பள்ளத்தில், சேறும், சகதியுமான தண்ணீரில் அவர்கள் சிக்கிக் கொண்டதால், 2 பேரின் உடல்களையும் உடனடியாக மீட்க முடியவில்லை.
டிரைவர் உடலை மீட்க...
இந்த நிலையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரின் நீண்ட நேரம் போராட்டத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிளனர் வெங்கடேசின் உடல் மீட்கப்பட்டது. ஆனால், டிரைவர் சந்தோசின் உடலை மீட்க முடியவில்லை. அந்த பள்ளத்தில் தண்ணீர், சகதி சேர்ந்து கிடப்பதால் அவருடைய உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீச்சல் வீரர்களும் சகதியில் இறங்கி தேடினார்கள். ஆனாலும் அவருடைய உடலை மீட்க முடியவில்லை.
அந்த பள்ளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தண்ணீருடன் சேறும் கலந்து இருப்பதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக டிரைவர் சந்தோசின் உடலை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலெக்டரின் காலில் விழுந்து கதறல்
இந்த நிலையில் நேற்று காலை ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சந்தோசின் மனைவி நவ்யா, அவருடைய 2 வயது மகள், சந்தோசின் தாய் ஆகியோர் வந்தனர். அவர்கள் கலெக்டர் ரோகிணி சிந்தூரியை சந்தித்து சந்தோசின் உடலை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த சமயத்தில், திடீரென்று சந்தோசின் மனைவியும், தாயும் கலெக்டர் ரோகிணி சிந்தூரியின் காலில் விழுந்து கதறி அழுதனர். அப்போது, சந்தோசின் உடலை எப்படியாவது மீட்க வேண்டும் என்றும், கடைசியாக சந்தோசின் முகத்தை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதனை சற்றும் எதிர்பாராத கலெக்டர் ரோகிணி சிந்தூரி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சந்தோசின் உடலை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது கலெக்டர் ரோகிணி சிந்தூரியும் அழுதார். இதையடுத்து சந்தோசின் உடலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ரோகிணி சிந்தூரி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.