மைனர் பெண் கடத்தி கற்பழிப்பு: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2018-08-17 23:30 GMT
பெங்களூரு, 

மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மைனர் பெண் கற்பழிப்பு

பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜ், மஞ்சுநாத் காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார் என்ற காமண்ணா (வயது 23). இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்தார். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி ரவிக்குமார் கடத்தி சென்றதாக தெரிகிறது. மேலும் மைனர் பெண்ணை ரவிக்குமார் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தார்கள்.

விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவிக்குமார் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரை கைது செய்ய கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. பின்னர் தலைமறைவாக இருந்த ரவிக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி சி.கே.அச்சுக்கட்டு போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

7 ஆண்டு சிறை தண்டனை

இதற்கிடையில், மைனர் பெண்ணை ரவிக்குமார் கடத்தி கற்பழித்தது தொடர்பான வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லதாகுமாரி தீர்ப்பு கூறினார். அப்போது மைனர் பெண்ணை ரவிக்குமார் காதலித்ததுடன், அவரை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்று கற்பழித்தது நிரூபணம் ஆனதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி லதாகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்