கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு, எம்.எம்.கலபுரகி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதால், அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-08-17 23:30 GMT
பெங்களூரு, 

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு, எம்.எம்.கலபுரகி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதால், அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

4 பேருக்கு தொடர்பு

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சுஜித்குமார், பரசுராம் வாக்மோர், பரத் கூர்னி, ராஜேஷ் பங்காரா அமோல் காலே, கணேஷ் மிஸ்கின், அமித் ராமசந்திரா, அமித் டிக்வேகார் உள்பட 14 பேரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அமோல் காலே, கணேஷ் மிஸ்கின், அமித் ராமசந்திரா, அமித் டிக்வேகார் ஆகிய 4 பேருக்கும், தார்வாரில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர் எம்.எம்.கலபுரகி கொலையிலும் தொடர்பு இருப்பதை சிறப்பு விசாரணை குழு போலீசார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். அவ்வாறு விசாரித்தால் எம்.எம்.கலபுரகி கொலை வழக்கில் முக்கிய துப்பு கிடைக்கும் என்று போலீசார் கருதுகின்றனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி

இதற்கிடையில், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதாகி உள்ள ராஜேஷ் பங்கேரா, பரத் கூர்னி ஆகியோர் பரசுராம் வாக்மோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததாக தெரிகிறது. அதாவது பரத் கூர்னிக்கு சொந்தமான பெலகாவி மாவட்டம் ஜம்போடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து பரசுராம் வாக்மோருக்கு விதவிதமான துப்பாக்கிகளை கொடுத்து ராஜேஷ் பங்காரா பயிற்சி அளித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்