குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடி கும்பலுக்கு வலைவீச்சு
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கடன் தருவதாக கூறி...
பாண்டுப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசீத் (வயது60). தொழில் அதிபரான இவர் முல்லுண்டு பகுதியில் எலக்ட்ரானிக் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ரசீத்தை பிரதீபா என்ற பெண் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தனியார் வங்கி ஊழியர் எனவும், அப்துல் ரசீத்திற்கு குறைந்த வட்டியில் கடன் தர தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதை நம்பிய தொழில் அதிபர் அப்துல் ரசீத் தனது தொழிலை விரிவுப்படுத்த மிகப்பெரிய தொகையை கடனாக கேட்டார். இதையடுத்து தொடர்ந்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என கூறி பலர் தொழில் அதிபரை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் கடன் கொடுப்பதற்காக பல்வேறு காரணங்களை கூறி ரூ.24 லட்சம் வரை பறித்தனர். அப்துல் ரசீத் அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு இந்த பணத்தை அனுப்பி இருந்தார்.
கும்பலுக்கு வலை
இந்தநிலையில் ரூ.24 லட்சம் கொடுத்தும் அவருக்கு கடன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பிரதீபா கூறிய தனியார் வங்கிக்கு நேரடியாக சென்று விசாரித்தார். அப்போது அங்கு பிரதீபா என்ற பெண் ஊழியரே இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கும்பல் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி அவரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மோசடி குறித்து அப்துல் ரசீத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபரிடம் மோசடியில் ஈடுபட்டவர் களை தேடி வருகின்றனர்.