5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுண்ணூட்ட சத்து வழங்க ஏற்பாடு
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுண்ணூட்ட சத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நுண்ணூட்ட சத்தாக ‘வைட்டமின் ஏ’ திரவம் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு தேவையான முக்கிய நுண்ணூட்ட சத்தாக ‘வைட்டமின் ஏ’ திரவம் விளங்குகிறது. இதனை வழங்குவதன் மூலம் கண் பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், பார்வையின்மை தடுக்கப்படுகிறது. குழந்தையின் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட ‘வைட்டமின் ஏ’ நுண்ணூட்ட சத்து 4 மாதங்களில் குறைய தொடங்கி 6 மாதங்களில் மிகவும் குறைந்து விடுகிறது. எனவே நுண்ணூட்ட சத்து 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை கொடுப்பது அவசியமாகும்.
மாவட்டத்தில் உள்ள 110 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 557 துணை சுகாதார நிலையங்கள், 2,938 அங்கன்வாடி மையங்களில் ‘வைட்டமின் ஏ’ திரவம் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 1,664 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். 386 அலுவலர்கள் மேற்பார்வையிட உள்ளனர். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ திரவத்தை கொடுத்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுந்தர்ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பாலுசாமி, ஜெமினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லலிதா மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், மாவட்ட தாய்சேய் நல அலுவலர்கள், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.