செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
செஞ்சி,
செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வார சந்தைக்கு செஞ்சி பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களில் அறுவடை செய்யும் விளைபொருட்களையும், தாங்கள் வளர்க்கும் ஆடுகள், மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். மேலும் இந்த வாரச்சந்தையில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும்.
அந்த வகையில் வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சி வாரச்சந்தைக்கு செஞ்சி மட்டுமின்றி மேல்மலையனூர், மயிலம், அவலூர்பேட்டை, ரெட்டணை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வந்திருந்தனர். இந்த ஆடுகளை வாங்குவதற்காக வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் பெங்களூரு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் செஞ்சிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி லாரி, மினிலாரி போன்ற வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக நடைபெறும் வாரச்சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை ஆகும். தற்போது பக்ரீத் பண்டிகை வர இருப்பதால் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆனது. அதில் ஆடு ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலைபோனது. குறிப்பாக நேற்று நடந்த வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றார்.