திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் செயல்படவில்லை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் செயல்படவில்லை.

Update: 2018-08-17 22:00 GMT
திருப்பூர், 


திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தயாரிப்பு பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தயாரிப்பு மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஜாப் ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து பின்னலாடை நிறுவனங்களின் சங்கம் சார்பில் 17-ந்தேதி (நேற்று) விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் படி வழக்கம் போல இயங்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படவில்லை. உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நிறுவனங்களின் வாகனங்களும் இயக்கப்படவில்லை. பெரும்பாலான உள்நாட்டு நிறுவனத்தினரும் தங்கள் இயக்கத்தை நிறுத்தியிருந்தன. அவசரகதியில் ஆர்டர்களை முடிக்க வேண்டிய சில நிறுவனத்தினரும், ஜாப் ஒர்க் நிறுவனத்தினர் மட்டுமே வழக்கம் போல தங்கள் பணிகளை செய்தனர்.

நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதால் அந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்கள் விடுதிகள் மற்றும் அறைகளிலேயே முடங்கினார்கள். கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் உணவு வாங்குவதற்காக அலைந்து திரிந்தனர். சில பனியன் தயாரிப்பு நிறுவனத்தினர் தங்கள் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி காதர்பேட்டை, நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பின்னலாடை மொத்த விற்பனை கடைகளும், சில்லரை விற்பனை கடைகளும் மூடப்பட்டிருந்தன. 

மேலும் செய்திகள்