மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷில்பா, வணிகர் சங்கம், அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் ஷில்பா பேசுகையில் கூறியதாவது:-
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அரிசி, உணவு பொருட்கள், குடிநீர், கொசுவர்த்தி, தீப்பெட்டிகள், படுக்கை விரிப்பு, பால் பவுடர், குளியல் மற்றும் சலவை சோப்புகள், காலணிகள், சேலை, வேட்டி, பாய், மெழுகுவர்த்தி, சட்டைகள், கைலி, வேட்டி, துண்டு வேட்டிகள், உள்ளாடைகள், கோதுமை, ரவை, மைதா, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இன்று (சனிக்கிழமை) காலை அரிசி மற்றும் காய்கறிகள் முதல்கட்டமாக லாரியில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
நிவாரண பொருட்கள் வழங்கி பொதுமக்கள் உதவி செய்ய விரும்பினால் நிவாரண பொருட்கள் சேகரிக்க மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பொருட்களை வழங்கலாம். பாளையங்கோட்டையில் உள்ள எம்.ஆர்.எப். டயர் குடோன் மற்றும் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகம் ஆகிய இடங்களிலும், மேலும் தங்களுக்கு அருகில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் நிவாரண பொருட்களை வழங்கலாம்.
இதுகுறித்த தகவல் தெரிந்து கொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் கட்டுப்பாட்டு அலுவலக தொலைபேசி என்னான 0462-2501032 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இதற்காக நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரி மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் என்பவரை 9444094354 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.