பாவூர்சத்திரம் அருகே மழையால் பாதிப்பு: கீழப்பாவூர் பெரியகுளம் பகுதியில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பெரியகுளம் பகுதியில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2018-08-17 22:30 GMT
பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பெரியகுளம் பகுதியில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கருமடையூர் கரையை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர் மழையால் பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரை பகுதியில் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன.

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் முதன்மை செயலாளரும், தொழில் துறை ஆணையாளருமான ராஜேந்திர குமார் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜேந்திரகுமார் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார்.

ஆய்வு

நேற்று 2-வது நாளாக அவர் நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பெரியகுளம் பகுதியில் உள்ள கருமடையூர், மூலக்கரையூர் ஆகிய இடங்களில் ராஜேந்திர குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் சாம்பவர் வடகரை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்து பொதுமக்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து கருமடையூர் பகுதியில் கரையை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜ், கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ், ஆலங்குளம் தாசில்தார் பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்