தூத்துக்குடியில் இருந்து கேரள மக்களுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் சென்றன 3 லாரிகளும் புறப்பட்டு சென்றன
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை 3 லாரிகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி அனுப்பி வைத்தார்.
நிவாரண பொருட்கள் சேகரிப்பு
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தற்போது கடுமையான மழையால் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரண பொருட்களை அன்போடு தூத்துக்குடி என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து சேகரித்து, கேரளாவிற்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், கோவில்பட்டி தாசில்தார் அலுவலகம், திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களில் பொருட்கள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்களை ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன், நிர்வாக தலைவர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினர்.
3 லாரிகளில்...
அந்த பொருட்கள் அனைத்தும் நேற்று மாலையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டன. 3 லாரிகளில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்டு அவைகள் நேற்று இரவு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொருட்கள் லாரிகளில் ஏற்றும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் லாரிகளை கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ், சப்-கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கப்பல் புறப்பட்டு சென்றது
இதே போல் அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு கேரள மக்களுக்காக அத்தியாவசிய நிவாரண பொருட்களுடன் கொச்சின் துறைமுகத்துக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
உணவு பொருட்கள், மருந்து, போர்வை, பாய், உள்ளிட்ட பொருட்கள், தண்ணீர் கேன்கள் ஆகியவை 3 சரக்கு பெட்டகங்களிலும், தீப்பெட்டி, மெழுகு வர்த்திகள் ஒரு சரக்கு பெட்டகத்திலும் வைத்து அனுப்பப்பட்டன. இதில் சுங்கத்துறை ஆணையாளர் திவாகர் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.