தூத்துக்குடியில் பலத்த காற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் பலத்த காற்று வீசி வருவதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பலத்த காற்று வீசி வருவதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மின்கம்பங்கள் சாய்ந்தன
கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை மற்றும் தமிழக கடல் பகுதி, கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் தூத்துக்குடி-தருவைகுளம் சாலையில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விசைப்படகுகள்
நேற்று முன்தினம் இரவு வீசிய காற்றில் தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்கா அருகே உள்ள ஒரு மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனை நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். நேற்று காலை முதலே பலத்த காற்று வீசி வந்தது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 245-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
முத்தையாபுரம்
நேற்று மாலையில் முத்தையாபுரம் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் முத்தையாபுரம் பி.டி.ஆறுமுகம் தெருவில் உள்ள பட்டு போன பனை மரம் மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதில் 3 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.