அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழ மண்டியில் திடீர் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே பழ மண்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பழங்கள், பொருட்கள் சேதம் அடைந்தது.

Update: 2018-08-16 22:30 GMT
திருவண்ணாமலை, 


உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழக கோவில்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது. கோவில்கள் அருகே கடை வைப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே மாடவீதியான தென் ஒத்தவாடை தெருவில் ஒரு பழ மண்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:–

அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் தென் ஒத்தவாடை தெருவும் ஒன்று. இத்தெருவில் பாத்திரக்கடை, விளையாட்டு பொருட்கள் கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் உள்ளன. திருமஞ்சன கோபுரம் அருகே இத்தெருவில் ஒரு பழ மண்டியும் உள்ளது.

அதன் உரிமையாளரான சபியுல்லா மொத்தமாக மா, வாழை, பப்பாளி, சாத்துக்குடி, தர்பூசணி போன்றவற்றை விற்பனை செய்து வந்தார். அந்த மண்டியின் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. நேற்று பகல் 11 மணி அளவில் பலத்த காற்று வீசியதால் அதில் இருந்து தீப்பொறி உருவாகி தென்னை ஓலைகளால் ஆன அந்த பழ மண்டி மீது விழுந்தது.

அடுத்த நிமிடமே தீப்பற்றிக் கொண்டது. மளமளவென எரிந்த தீயை கண்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் அவர்களால் முடியவில்லை.

அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தில் கடையில் இருந்த 2 தள்ளுவண்டி, ஒரு மோட்டார்சைக்கிள், கடையில் உள்ள பொருட்கள், பல டன் பழங்கள் கருகியது. அதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். அருகில் உள்ள கடைகளுக்கும் பரவாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்