மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

சேலத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-16 23:26 GMT
சேலம்,

சேலம் வடக்கு அம்மாபேட்டை பகுதியில் சீலாவரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 2 மதுக்கடைகள் உள்ளன. இந்த பகுதியில் தனியார் பள்ளிக்கூடமும், அருகில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. சாலையோரம் உள்ள மதுக்கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தொந்தரவாகவும் இருப்பதாக கூறி மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை மதுக்கடைகள் அருகே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். பின்னர், அவர்கள் மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையில் உள்ள 2 மதுக்கடைகளால் என்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது? என்பது குறித்து போலீசாரிடம் பெண்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

அப்போது, மதுக்கடைகளை அகற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்ததால் ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலுக்கு முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதேசமயம், சில பெண்கள் தரையில் மண்டியிட்டு மதுக்கடையை அகற்றுங்கள் என்று அதிகாரிகளை பார்த்து கண்ணீர்விட்டு கதறி கெஞ்சினர். அதேபகுதியை சேர்ந்த அருள் என்பவர் திடீரென மதுக்கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அறிந்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

இதனிடையே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் எடுத்துக்கூறி மதுக்கடைகளை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ஏற்கனவே 2 மதுக்கடைகளையும் அகற்றக்கோரி நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் மதுகுடித்துவிட்டு சண்டை போடுகிறார்கள். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் பெண்களை கேலி, கிண்டலும் செய்கிறார்கள். எனவே, சீலாவரி ஏரி பகுதியில் உள்ள 2 மதுக்கடைகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு செல்கிறோம். எனவே, பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்