வாஜ்பாயால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம்

வாஜ்பாயால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கமுடன் கூறுகையில், “சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்“ என்றார்.

Update: 2018-08-16 23:16 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் புல்லுச்சேரி கிராமத்தை சேர்ந்த பெண், சின்னப்பிள்ளை. களஞ்சியம் என்ற பெயரில் இயக்கம் நடத்திய இவர், மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். இதற்காக அவருக்கு 2001-ம் ஆண்டு மத்திய அரசின் “ஸ்ரீ ஸ்திரீ சக்தி“ விருது கிடைத்தது. அப்போது அவருக்கு இந்த விருதினை வழங்கிய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து தொட்டு கும்பிட்டார். இதைத்தொடர்ந்து சின்னப்பிள்ளை நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.

இந்த நிலையில் வாஜ்பாய் மரணம் குறித்து, சின்னப்பிள்ளை கூறியதாவது:-
கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசின் விருதினை பெறுவதற்காக முதன் முறையாக நான் டெல்லிக்கு விமானத்தில் சென்றேன். அந்த விழாவில் என்னுடன் 4 பேர் விருது பெற்றனர்.

நான் தான் முதலாவதாக விருதினை பெறுவதற்கு சென்றேன். அப்போது வாஜ்பாய், மதுரை சின்னப்பிள்ளை என்று ஏதோ கூறி, எனது காலில் திடீரென்று விழுந்து விட்டார். உடனே சுதாரித்து கொண்டு, நான் அவரது காலில் விழுந்தேன். அப்போது எனது உடல் நடுங்கி விட்டது. அருகில் இருந்த ஒருவர் என்னிடம் தமிழில், “சிறிய கிராமத்தில் படிக்க முடியாத சூழ்நிலையில் வளர்ந்து இன்று பலரின் குடும்பத்திற்கு நீங்கள் உதவி செய்து உள்ளர்கள். அதனால் தான் பிரதமர் உங்கள் காலில் விழுந்தார். நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம்“ என்றார். அப்போது தான் எனது பதற்றம் தணிந்தது.

நாட்டுக்கே பிரதமரான அவர் எனது காலில் விழுந்ததை நினைக்கும் போது இப்போதும் எனது மனம் பதைபதைக்கிறது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மனமுடைந்து போய் விட்டேன்.

சிறந்த தலைவரை இழந்துவிட்டோம். அவரை போன்ற ஒரு தலைவர் இனி நாட்டுக்கு கிடைக்க போவதில்லை. அவர் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியறிந்து அவரை பார்க்க வேண்டும் என்று மனம் எண்ணியது. ஆனால் எனக்கும் உடல் நலம் சரியில்லாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்