கோவிலில் உண்டியல்கள் திருட்டு: சிறுவன் உள்பட 2 பேர் கைது

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 3 உண்டியல்களை தூக்கிச்சென்று பணத்தை திருடிய சிறுவன் உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

Update: 2018-08-16 22:41 GMT
தாடிக்கொம்பு, 


திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இது இந்துசமய அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 13-ந்தேதி ஆடிப்பூரத்தன்று பூஜைகள் முடிந்த பின்னர், ஊழியர்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

மறுநாள் காலையில் கோவிலை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 3 உண்டியல்கள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாநிதி, இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான 3 உண்டியல்களும், தாடிக்கொம்பு அருகே உள்ள ஒரு குளத்தில் இருந்த பள்ளத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில், முகமூடி அணிந்த 3 நபர்கள் உண்டியல்களை உடைத்து தூக்கிச்செல்வது பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கினர்.

விசாரணையில், கோவிலில் உண்டியல்களை உடைத்து திருடியது அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 20), 17 வயதுடைய சிறுவன் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜபாண்டி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த உண்டியல்களில் மொத்தம் ரூ.500 மட்டுமே இருந்தது என கொள்ளையர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

கோவிலில் கடந்த 7-ந்தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்