சுதந்திர தினத்தன்று இயங்கிய 48 நிறுவனங்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று இயங்கிய 48 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2018-08-16 22:15 GMT
கரூர்,

சென்னை முதன்மை செயலரும், தொழிலாளர் ஆணையருமான நந்தகோபால் உத்தரவின் பேரில், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் (பொறுப்பு) லட்சுமிகாந்தன் அறிவுறுத்தல்படி கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில், கரூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்பட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சுதந்திர தினத்தன்று கூட்டாய்வு மேற்கொண்டனர்.

அப்போது தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கோரும் படிவம் ஆய்வாளர்களுக்கு அனுப்பாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக 1961-ம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களை ஆய்வு செய்ததில் 5 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளின்கீழ் 43 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் 28 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 18 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் கரூர் மாவட்டத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 81 நிறுவனங்களை ஆய்வு செய்ததில் சுதந்திர தினத்தன்று இயங்கிய 48 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

மேலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுப்போ அளிக்க வேண்டும் என்றும், தவறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முரண்பாடு கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்