எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
இது தொடர்பாக கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்வதற்கு பதிலாக, தாங்கள் படித்த பள்ளிகளிலேயே மதிப்பெண் பட்டியலை பெறும் நாளிலே, கணினி வாயிலாக ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது வரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாமல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பள்ளியில், மதிப்பெண் சான்றிதழ் பெறச்செல்லும் போது, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் சென்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை அந்தந்த பள்ளிகளிலேயே இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையை பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
சான்றிதழ் வழங்கும் 16-ந்தேதி (நேற்று) முதல் வருகிற 30-ந்தேதிக்குள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் பதிவு செய்யும் அனைவருக்கும் 16-ந்தேதி என்ற ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும். பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செல்ல தேவையில்லை.
ஆகவே மாணவர்கள் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் அவர் கூறியுள்ளார்.