பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

காட்டுமன்னார்கோவில் அருகே தூர்ந்து கிடக்கும் பாசன வாய்க்காலை தூர்வாரக்கோரி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-16 21:45 GMT
சிதம்பரம், 


காட்டுமன்னார்கோவில் அடுத்த சி.அரசூர் கிராமத்தில் உள்ள தச்சன் தெரு பாசன வாய்க்கால் அருகே 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பாசன வாய்க்கால் கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண், முட்செடிகளால் தூர்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக தச்சன் தெரு பாசன வாய்க்காலில் வந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது.

இதனால் ஆத்திரமடைந்த தச்சன் தெரு பகுதி பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், குமராட்சி ஒன்றிய தலைவர் செல்வகாந்தன், வீராணம் ஏரி விவசாய சங்க தலைவர் பாலு, துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தூர்ந்து கிடக்கும் தச்சன் தெரு பாசன வாய்க்காலை தூர்வாரக்கோரியும், வாய்க்கால் கரைகளின் இருபுறங்களிலும் கான்கிரீட் மூலம் தடுப்பு சுவர் அமைக்கக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், பாசன வாய்க்கால் தூர்வாரி கரைகளை பலப்படுத்துவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுக்குமாறும் அறிவுறுத்தினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்