கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்க வேண்டாம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

Update: 2018-08-16 23:00 GMT
கரூர்,

கரூரில் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தவுட்டுப்பாளையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளும் அரசு சார்பில் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பு ஏற்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும் என மக்கள் கேட்டிருக்கின்றனர். இது குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பரிசீலிக்கப்படும். கரூரின் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை பற்றி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் பஞ்சப்பட்டி உள்ளிட்ட ஏரிகளில் குழாய்கள் மூலம் தண்ணீர் நிரப்புவது பற்றி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிகநீர் வரும் போது ஏரிகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கும். இதனை இப்படியே விட்டு விட மாட்டோம். காவிரி- குண்டாறு திட்டம் பற்றி மத்திய அரசிடம் எடுத்துரைத்து நிதி ஒதுக்க கேட்டுள்ளோம். கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.

கருணாநிதி முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். உழைத்தார். அவரை தி.மு.க.வினர் கட்சியில் இருந்து நீக்கியதால்தான் மக்கள் அவருக்கு முன்னும், பின்னும் இருந்து இயக்கத்தை உருவாக்கினார்கள். அ.தி.மு.க. தனிப்பட்ட ஒருவரால் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது மக்கள் இயக்கம். மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். 

மேலும் செய்திகள்