தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-08-16 22:00 GMT
கள்ளக்குறிச்சி, 



கள்ளக்குறிச்சி அருகே உள்ள நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பூவிழிராஜா (வயது 27), தொழிலாளி. இவரது மனைவி கவிதா(25). நேற்று முன்தினம் காலை பூவிழிராஜா சின்னசேலத்துக்கு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று பூவிழிராஜா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பூவிழி ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பலியான பூவிழிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவிதா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர் அருகே ஆயந்தூர் ஆர்க்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் மில்கிஷ் (வயது 45). இவர் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டல் அருகே உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மில்கிஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மில்கிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்