லாரி-கார் மோதிய விபத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பலி மனைவி உள்பட 4 பேர் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பலியானார். அவருடைய மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2018-08-16 22:15 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நரிப்பள்ளியை சேர்ந்தவர் கமலநாதன் (வயது55). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழமுதம். இவர் தெத்தேரி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கமலநாதனின் அண்ணன் திருப்பூரில் புதிதாக கட்டி உள்ள வீடு கிரகபிரவேச நிகழ்ச்சிக்காக மனைவி மற்றும் 2 மகன்கள் உள்பட 5 பேர் காரில் புறப்பட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் நூற்பாலை பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற கமலநாதன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கமலநாதன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தலைமை ஆசிரியர் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

மேலும் செய்திகள்