வண்டலூர் அருகே ரூ.2 கோடியில் 300 வகை மரங்களுடன் மரப்பூங்கா
வண்டலூர் அருகே ரூ.2 கோடியில் 300 வகை மரங்களுடன் மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கத்தில் ரூ.2 கோடியில் வன மரபியல் வள மரப்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வளர்ந்து வரும் 300 வகை மரங்களை ஓரிடத்தில் வளர்த்து மரபியல் வளங்கள் கொண்ட மரப்பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உவா, செண்பம், கோடங்கி, மாவிலங்கம், மரவெட்டி, காட்டுசம்பங்கி, மஞ்சள்நாங்கு, மூளி, தடசு, காவலம், மட்டிபால், கருப்பு குங்கிலியம், ஈட்டி, எட்டி, தேக்கு, வேம்பு, சந்தனம், செம்மரம், வேங்கு, இலுப்பை, கருங்காலி, நீர்க்கடம்பு, குமிழ், மஞ்சக்கடம்பு, கல்தேக்கு, கருமருது, நீர்மருது, அசோகம், இருள், செம்பில், மதகிரிவேம்பு, வெண்ணாங்கு, கொடம்புளி, வக்கனை, நருவிழி, மயிலடி, தணக்கு, மிளாச்சதையன், உள்பட அழியும் நிலையில் உள்ள 300 வகையான மரக்கன்றுகளை பொதுமக்கள் அனைவரும் ஓரிடத்தில் பார்த்து ரசிக்கலாம்,
இந்த மரப்பூங்காவில் 1,500 எண்ணிக்கையில் 300 வகை மரக்கன்றுகள் வரிசையாக 10 அடி இடைவெளி விட்டு அழகாக நடப்பட்டுள்ளது.
குடில்கள்
மரப்பூங்காவில் பார்வையாளர்களுக்கு அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கையான நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. மரப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 300 வகையான மரங்களின் தகவல்கள், புகைப்பட வடிவத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் திறந்து வைத்தார்
இந்த மரப்பூங்கா திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு வன ஆராய்ச்சி பிரிவின் 100-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு அரசு முதன்மை செயலாளர் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை) முகமது நசிமுதின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வன மரபியல், வள மரப்பூங்காவை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து கொளப்பாக்கம் வன ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு வன ஆராய்ச்சி பிரிவின் 100-வது ஆண்டு விழாவில் பங்கேற்று வன அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இயற்கை முறையில் நுண்ணுயிர் உரங்கள் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு குறித்த காணொளி குறுந்தகடு மற்றும் வன ஆராய்ச்சி பிரிவின் நூற்றாண்டு மலரையும் அமைச்சர் வெளியிட்டார்.
20 ஏக்கர் நிலம் மீட்பு
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
காடுகளை பாதுகாப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்குகிறது. சமூக காடுகள் திட்டம் தமிழகத்தில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 20 ஏக்கர் நிலம் கோர்ட்டு மூலம் மீட்கப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் மற்ற துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதிகாரிகள் அதிக அளவில் தமிழில் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இணையதளம் மூலம் விற்பனை
புதிதாக திறக்கப்பட்ட மரப்பூங்கா காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பூங்காவின் நுழைவு கட்டணம் ரூ.5- ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. மூலிகை செடி இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பருவ மழை பெய்வதை முன்னிட்டு வனப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவுக்கு இன்னும் 2 மாதங்களில் பீகார் மாநிலத்தில் இருந்து காண்டாமிருகம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முதன்மை வனப் பாதுகாவலர் ஆர்.கே. உபாத்யாய், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குனர் சேகர் குமார் நிராஜ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மரகதம் குமரவேல் எம்.பி., மாநில வன ஆராய்ச்சி நிலைய துணை வன பாதுகாவலர் கே.எஸ்.சத்தியமூர்த்தி, காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.