கடை ஊழியரை நூதன முறையில் ஏமாற்றி செல்போனுடன் தப்பியவருக்கு போலீஸ் வலைவீச்சு
படப்பை அருகே செல்போன் கடை ஊழியரை நூதன முறையில் ஏமாற்றி செல்போனுடன் தப்பியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
படப்பை,
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள செல்போன் விற்பனை செய்யும் கடைக்கு நேற்றுமுன்தினம் ஒருவர் போன் செய்தார். அவர் தன்னை அருண்குமார் என அறிமுகப்படுத்தி, ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் உள்ளதா? எனக்கேட்டார். அதற்கு ஷோரூம் மேலாளர் கார்த்தி வெள்ளைச்சாமி, உள்ளது என பதில் அளித்தார். இதையடுத்து அருண்குமார், அந்த செல்போனை எருமையூர் அருகே உள்ள கிஷ்கிந்தா பகுதிக்கு கொண்டு வந்து விட்டு தன்னை செல்போனில் அழைக்குமாறு தெரிவித்தார்.
பின்னர் கடை ஊழியர் பல்லாவரத்தை சேர்ந்த சிராஜூதீன் (வயது 31) செல்போனை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு வந்த அருண்குமார், சிராஜூதீனுக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டு முகவரியை குறிப்பிட்டு செல்போனுக்கு பில் போடுங்கள் என எழுதி கொடுத்தார்.
தப்பிச்சென்றார்
பின்னர் சிராஜூதீனை அழைத்துக்கொண்டு படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அங்கு 2-வது மாடியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் பாக்யராஜ் என்பவர் இருப்பார். அவரிடம் சென்று பணம் வாங்கிக்கொள்ளுங்கள். செல்போனை நான் வைத்து இருக்கிறேன். நான் மேலே வந்தால், அவர் என்னை வேலை வாங்குவார் என தெரிவித்தார்.
இதை நம்பிய சிராஜூதின், 2-வது மாடிக்கு சென்றபோது, அங்கு அலுவலகம் எதுவும் இல்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கீழே வந்து பார்த்தபோது அருண்குமார் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிராஜூதின் உடனடியாக சோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் செல்போனுடன் தப்பிச் சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.