அமணம்பாக்கம் கிராமத்தில் ரூ.11¼ கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ரூ.11 கோடியே 20 லட்சம் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த குடிசை வீடுகளை வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றி மீட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே அமணம்பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வடக்கு திசையில் நீர்நிலை புறம்போக்கு வரவு கால்வாய் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 16 நபர்கள் குடிசைகளை அமைத்திருந்தனர்.
மேலும், இதே பகுதியில் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான 20 சென்ட் இடத்தில் 6 பேர் குடிசைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
ரூ.11 கோடியே 20 லட்சம்
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே, கலெக்டர் உத்தரவின்பேரில் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றி அரசு நிலத்தை மீட்டனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 20 லட்சம் ஆகும். ஆக்கிரமிப்பு அகற்றியபோது வீடு இழந்த அனைவருக்கும் 2 சென்ட் வீதம் மாற்று இடம் வழங்கப்பட்டது.