மீஞ்சூர் அருகே ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு வருவாய்த்துறை நடவடிக்கை

மீஞ்சூரை அடுத்த செம்பியம்மணலி ஏரியை ஆக்கிரமித்து 50 ஏக்கரில் வாழை, நெல் பயிரிடப்பட்டிருந்ததை வருவாய் துறையினர் அகற்றி ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டனர்.

Update: 2018-08-16 22:45 GMT
மீஞ்சூர், 

தமிழகத்தில் உள்ள ஏரிகளை குடிமராமத்து பணிகள் செய்ய பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்தது.

ஏரிகளை தூர்வாரியும், கரைகளை செப்பனிடவும், கலங்கல், மதகுகள் வரவுக்கால்வாய்களை அமைக்கவும் அந்த பணிகளை மழைக்காலத்திற்கு முன்னதாக வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு ஆணையிடபட்டிருந்தது.

இந்த பணிகளை ஆய்வு செய்ய இந்திய ஆட்சி பணி உயர் அதிகாரிகளை அரசு நியமித்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறுகளில் வடிநில கோட்ட பொதுப்பணி துறை செயற்பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வந்தது.

ஆய்வு பணி

இதையடுத்து சோழவரம் ஒன்றியத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு வடி நில கோட்டத்தில் குடிமராமத்து பணிகளை தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையாளரும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் குடிமராமத்து பணி ஆய்வு அதிகாரியான அமுதா மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோர் கடந்த மாதம் முதல் கட்ட ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செம்பியம்மணலி ஏரியை பார்வையிட்டபோது ஏரி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாமல் இருக்கும் இந்த ஏரியை குடிமராமத்து பணிகள் சரியாக செய்யவில்லை என பொதுப்பணித்துறை நீர்வள செயற்பொறியாளர் மற்றும் பொறியாளர்கள் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை ஆழப்படுத்தும் வகையில் தூர்வார உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் ஏரியை நில அளவை துறையினர் மூலம் அளந்து ஏரியின் பரப்பை கண்டறிந்தனர்.

செம்பியம்மணலி ஏரி 146 ஏக்கர் பரப்பளவில் 1,325 மீட்டர் ஏரிகரையை கொண்டதாக விளங்குகிறது. இதில் 50 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நெல், வாழை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

ரூ.20 கோடி நிலம் மீட்பு

இந்த நிலையில் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. முத்துசாமி முன்னிலையில் தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ஜுலியட்விமலா, மாதவரம் போலீஸ் உதவி ஆணையர் பிரபாகரன், மணலிபுதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் பொதுப்பணி துறை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் ஏரியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல் பகுதிக்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினர்.

இதுகுறித்து பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி கூறு கையில்:-

செம்பியம்மணலி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் வாழையும், 10 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்