காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது மேட்டூர் அணையில் இருந்து 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 65 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பேரிடர் மீட்பு குழுவினர் மேட்டூருக்கு வந்துள்ளனர்.

Update: 2018-08-16 23:00 GMT
மேட்டூர்,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஒரு வாரகாலத்துக்கு பிறகு அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், அணைக்கு நீர் வரத்து திறப்பை விட குறைவாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. அணையின் நீர்மட்டம் 116 அடியாக குறைந்த நிலையில் கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்தது. இதனால் கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அணைக்கு தொடர்ந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதையடுத்து உபரிநீர் வெளியேறும் பாதையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் தார்சாலை மேட்டூர் அனல்மின் நிலையத்தையொட்டி அமைந்துள்ளது. இந்த சாலையையொட்டி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் கடந்து செல்கிறது.

இதனிடையே நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் தார்சாலையை தண்ணீர் மூழ்கடித்து சென்றதால் இந்த சாலை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல போலீசார் தடைவிதித்தனர். சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் தண்ணீர் அதிகமாக ஓடியதால் மேட்டூர்-எடப்பாடி சாலையில் 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

நேற்று பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பேரிடர் மீட்பு குழுவினர் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டூருக்கு வந்துள்ளனர். இவர்கள் மேட்டூர் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்கி உள்ளனர். அவர்கள் குழு, குழுவாக பிரிந்து சென்று காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருவாய்த்துறை யினர், போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்