திருவொற்றியூரில் பள்ளத்தில் சிக்கி கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
திருவொற்றியூரில் மழைநீர் தேங்கிநின்ற பள்ளத்தில் லாரி சக்கரம் சிக்கி, கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூரை அடுத்த மணலி புதுநகர் ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான அரிசி குடோனில் இருந்து சுமார் 60 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரி சென்றது.
திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் பகுதியில் பாப்புலர் எடைமேடை அருகே சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்துவந்த மழையால் அந்த பள்ளத்தில் தண்ணீர்தேங்கி உள்ளது.
இது தெரியாத கன்டெய்னர் லாரி டிரைவர் ராஜேந்திரன்(வயது 39) அந்த வழியாக ஓட்டிச்செல்லும்போது மழைநீர் தேங்கிநின்ற பள்ளத்தில் லாரி சக்கரம் சிக்கி, கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. நல்ல வேளையாக டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கன்டெய்னர் லாரிகள் மாற்றுப்பாதையில் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 10 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.