வில்லிவாக்கத்தில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
சென்னை வில்லிவாக்கத்தில் பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப். வடக்கு காலனியை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி(வயது 46). இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென ஆரோக்கியமேரி கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். சுதாரித்துக்கொண்ட ஆரோக்கியமேரி, தங்க சங்கிலியை தனது கையால் பிடித்துக்கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார்.
இதில் தங்க சங்கிலி 2 துண்டானது. கையில் சிக்கிய 3 பவுன் தங்க சங்கிலியுடன் மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர். மீதம் உள்ள 3 பவுன் சங்கிலி ஆரோக்கியமேரி கையில் சிக்கியது. இது குறித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.