நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-08-16 22:45 GMT
திட்டச்சேரி,

சுதந்திர தின விழாவையொட்டி நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி, கிராம சேவை மையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு ஊராட்சிகளில் வளர்ச்சி குறித்து பேசினார்.

கூட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுதல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்தும், அந்தியோதயா இயக்கத்தின் கீழ் வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்றுவது தொடர்பான விவாதம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்த விவாதம், குடிநீர் சிக்கனம் குறித்த விவாதம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அதனை கலெக்டர் பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் நாகை உதவி கலெக்டர் கமல் கிஷோர், உதவி இயக்குனர் (ஊராட்சி) மோகன், இணை இயக்குனர் (வேளாண்மை) நாராயணசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தமிழ்செல்வன், தியாகராஜன், தாசில்தார் இளங்கோவன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பொதுமக்களோடு மதிய உணவு சாப்பிட்டார். 

மேலும் செய்திகள்