நண்பரை கொலை செய்து எரித்தவருக்கு ஆயுள் தண்டனை
குளத்தூர் அருகே நண்பரை கொலை செய்து எரித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தூத்துக்குடி,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கநாதன்புதூரை சேர்ந்தவர் சுடலைகனி. இவருடைய மகன் சந்தோசம்(வயது 39). இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. இவருக்கும், நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த அந்தோணி மகன் ராபர்ட் ஜான்சன் கென்னடி(42) என்பவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டது. ராபர்ட் ஜான்சன் கென்னடி பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு உள்ளார். இவர் திருடும் பொருட்களை சந்தோசத்திடம் கொடுத்து விற்பனை செய்து பணம் பெற்று வந்து உள்ளார்.
இந்த பணம் கொடுக்கல் வாங்கலில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 4-7-16 அன்று ராபர்ட் ஜான்சன் கென்னடியை தூத்துக்குடிக்கு வருமாறு சந்தோசம் அழைத்தார். இதனால் தூத்துக்குடிக்கு வந்தவரை, சந்தோசம் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு குளத்தூர் அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம்-வைப்பார் இடையே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேரும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோசம், ராபர்ட்ஜான்சன் கென்னடி தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து, அவருடைய உடலில் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசத்தை கைது செய்து, தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட சந்தோசத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000-ம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.