கொரடாச்சேரி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை

கொரடாச்சேரி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-16 22:15 GMT
கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே களத்தூர் மேல்கரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அவருடைய மனைவி சித்ரா (வயது 33). இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சித்ராவுக்கு நீண்ட காலமாக வயிற்றுவலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் மனவேதனை அடைந்த சித்ரா, வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்று தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். தீயின் வெப்பத்தால் வலி தாங்க முடியாமல் சித்ரா அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து சித்ராவை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா உயிரிழந்தார்.

இதுகுறித்து சித்ராவின் தாயார் நித்தினி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்