தாமிரபரணி வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாதிப்பு இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிப்பு இல்லை என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2018-08-16 21:45 GMT
ஸ்ரீவைகுண்டம், 


நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இந்த நிலையில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் நேற்று மாலையில் வல்லநாடு அருகே உள்ள மருதூர் தடுப்பணை மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மருதூர் அணையில் இருந்து மேலக்கால், கீழக்கால் மூலமும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால், தென்கால் மூலமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இந்த 4 கால்வாய்களில் உள்ள 53 குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அவற்றின் வழியாக மொத்தம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையில், பொதுப்பணித்துறையினர், வருவாய்துறையினர், தீயணைப்பு துறையினர் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருடன் தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்